சுக்கிராச்சாரியார் கண் பெற்ற தலம்:

சென்னை,மயிலாப்பூரில் தெற்கு மாட வீதியில் பிரதான சாலையில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது அருள்மிகு காமாட்சி உடனுறை் வெள்ளீசுவரர் ஆலயம். இந்த ஆலயம் முழுமையாகக் கட்டப்பட்டு சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் என வரலாறு அறியப்படுகிறது.

about

கோயில் வரலாறு:

"திருமயிலைத் தல புராணம்" என்ற நூல் திரு.நாதமுனி முதலியாரால் எழுதப்பட்டுள்ளது.இந்த நூலில் வெள்ளீசுவரர் ஆலயம் பற்றி விளக்கப்பட்டுள்ளது.இந்த ஆலயம் மயிலையைச் சுற்றி அமைந்துள்ள சப்த ஸ்தான தலங்களுள் மூன்றாவதாகக் கூறப்படுகிறது.

தற்போது ஆலயமுள்ள இடத்தில் முன்னொரு காலத்தில் சிறிய விநாயகர் சன்னதி மட்டும் அமைந்திருந்ததாகவும்,பின்னர் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டதாகவும் வழிவழியாக வந்த முன்னோர்களின் கருத்தாக அறிகிறோம்.


about

மஹாபலி சக்கரவர்த்தி செய்த யாகத்தில்,தானம் பெற வந்த,வாமன அவதாரம் பூண்ட திருமால், மூன்றடி மண் வேண்ட, வந்திருப்பது திருமால் என உணர்ந்த சுக்கிராச்சாரியார், தானம் தர வேண்டாமென மஹாபலியிடம் கூற,குரு வார்த்தையை மீறி, மஹாபலி தானம் தர ஒப்புக் கொண்டார்.தானத்தைத் தடுக்கும் நோக்குடன் சுக்கிராச்சாரியார் வண்டு உருவமெடுத்து தாரை வார்க்கும் கெண்டியின் துளை மூலம் நீர் வெளி வரும் வாயை அடைத்து நிற்க,திருமால் தர்ப்பைப்புல்லினால், நீர் வரும் துவாரத்தைக் குத்த, சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் பார்வை பறிபோனது.

இழந்த கண் பார்வையை மீட்க, சுக்கிராச்சாரியார் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் செய்ய,மயிலையில் குருந்த மரத்தின் கீழொரு சிவலிங்கம் ஸ்தாபித்து தவத்தைத் தொடர்ந்தார், தவ வலிமையைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், திருமால், பிரம்மன் ஆகியோருடன் காட்சித் தந்து சுக்கிராச்சாரியாருக்கு கண்ணொளி வழங்கி ஆசி புரிந்தார்.அந்த இடமே தற்போதுள்ள வெள்ளீஸ்வரர் ஆலயம் ஆகும். சுக்கிராச்சாரியாரின் விருப்பத்திற்கிணங்க சிவபெருமான் இங்கு வெள்ளீஸ்வரராக அருள்புரிகின்றார். 1874 ஆம் ஆண்டு முதல் 2015 வரை இத்திருக்கோவில் திருமயிலை கிராம செங்குந்தர் மகாசபையினரால் நிர்வகிக்கப்பட்டு அவர்கள் மூலம் தேர்தெடுக்கப்பட்ட மூன்று அறங்காவலர்களால் நிர்வாகம் செயல்படுகிறது.

அறங்காவலர்களாக இருந்தவர்களின் பெயர்கள் ஒரு கல்வெட்டில் இந்த ஆலயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த ஆலயத் திருப்பணி மற்றும் உற்சவங்களுக்காக நன்கொடை ஈந்தவர்கள் விபரங்களை இவ்வாலயத்திலுள்ள பல கல்வெட்டுக்கள் மூலம் நாம் அறியலாம்.

ஆலய சன்னதிகள்:

செங்குந்த மரபினரால் நிர்மாணிக்கப்பட்ட, சுதை சிற்பங்கள் நிறைந்த ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் நாம் அருள்மிகு தென்கூர் செல்வ விநாயகர் சன்னதியைக் காணலாம்.தெற்கு நோக்கிய தனிச்சன்னதியில் விநாயகர் சித்தி,புத்தி சமேதராய் நின்ற கோலத்திலும் காட்சி தருவது வேறெந்த ஆலயத்திலும் காண இயலாத சிறப்புக் காட்சியாகும்.எந்த சன்னதி நேரெதிரே தான் தென்கூர் செல்வ விநாயகர் கோயில் தெரு அமைத்துள்ளது.மிகவும் வரப்பிரசாதியாக இந்த விநாயகர் திகழ்கிறார்.

இதையடுத்து கிழக்கு நோக்கிய வண்ணம் தனிச்சன்னதியில் கருவறையில் அருள்மிகு வெள்ளீஸ்வரர் லிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார்.நாகாபரண அலங்காரத்தில் சிவபெருமானை தரிசிப்பது கண்கொள்ளா காட்சியாகும். சிவபெருமான் சன்னதியெதிரே நந்தியம்பெருமாள் தனி மண்டபத்தில் காட்சி தருகிறார்.பிரதோஷ நாட்களில் நந்தியம்பெருமாளுக்கு அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்காரங்கள் செய்யப்படுகிறது.நந்தியம்பெருமாள் சன்னதிக்கு பின்னால் கொடிமரம்,பிரம்மசக்தி அமைந்துள்ளது.கருவறை நுழைவு வாயில் முன்பு வலது,இடது புறம் விநாயகர், முருகர் கல் சிற்பங்கள் உள்ளன.இதற்கு சற்று மேலே நாம் பாதுகாவலர்களாக நிற்கும் பூத கணங்களைக் காணலாம்.

சிவபெருமான் சன்னதிக்கு வலது புறத்தில் தெற்கு நோக்கிய திசையில் தனிச் சன்னதியில் அருள்மிகு காமாட்சியம்மன் எழுந்தருளியுள்ளார்.நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன்,மேலிரு கரங்களில் மலரை ஏந்தியும், கீழிரு கரங்களில் அபய,வரத முத்திரை தாங்கியும் பூரண அலங்காரத்துடன் புன்னகை தவழும் திருமுகத்துடன் அருள்பாலிக்கின்றார்.அன்னையின் அழகு நம்மை சன்னதியை விட்டு வெளியேற மறுக்கும் வண்ணம் ஈர்ப்பாக உள்ளது.

கருவறையை ஒட்டியுள்ள உள் பிரகாரத்தில் தெற்குப் பகுதியில் ஆலய உள் பிரகராச் சுற்றுச் சுவரை ஒட்டி நுழைவாயில் தொட்டு மேடையில் விநாயகருடன், சமயக் குரவர் நால்வர்கள் கல் சிற்பங்களாக காட்சி தருகின்றனர்.இதை தொடர்ந்து சிவசூரியன் மற்றும் சப்த கன்னிமார்களாகிய பிரம்மி,மகேஸ்வரி,கௌமாரி,வைஷ்ணவி,வராகி,இந்திராணி,சாமுண்டி ஆகியோர் அமர்ந்த நிலையில் தனித்தனியே அருள்பாலிக்கின்றனர்.வீரபத்திரர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.இதையடுத்து நாகேந்திரர்,திருவண்ணாமலை எம்பெருமான் உண்ணாமலையம்மனுடன் இருப்பதை நாம் காணலாம்.அடுத்து வடக்குப் பக்கத்தில் சுவரையொட்டியுள்ள மேடையில் சரஸ்வதி,லட்சுமி,மெய்கண்டசிவம்,அருள்நிதிசிவம்,மறைஞான சம்பந்தர்,உமாபதிசிவம்,சேக்கிழார்,உலகளந்த பெருமாள்,காசி விஸ்வநாதர்,நந்திகேஸ்வரர்,தண்டாயுதபாணி ஆகியோர் எழுந்தருளியுள்ளார்கள்.

கருவறை கோஷ்டத்தில் மஹாகணபதி,தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர்,பிரம்மன்,கோமுகியில் சண்டிகேஸ்வரர் காட்சி தருகின்றனர்.அடுத்து தனிச்சன்னதியில் துர்க்கையம்மன் வடக்கு நோக்கிய திசையில் அருள்பாலிக்கின்றார்.இதன் நேரெதிரே செல்கையில் நாம் இறைவன் பள்ளியறையையும், சோமாஸ்கந்தரையும்,வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானையும் உற்சவர் கோலத்தில் காணலாம்.

தென்மேற்கில் சற்று நடக்கையில்,நாம் வள்ளி,தெய்வானை சமேத முத்துகுமாரசுவாமியை தனிச்சன்னதியில் வணங்கலாம்.இச் சன்னதி முன்பு கொடிமரம்,பலிபீடம் அமைந்துள்ளது.சன்னதி முன்பு வலது மற்றும் இடது புறத்தில் சிறிய கல் சிற்பமாக அருணகிரிநாதர் மற்றும் வீரபாகு வடிக்கப்பட்டுள்ளனர்.அருள்மிகு முத்துக்குமாரசுவாமி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார்.மேலிரு கரங்களில் வேல் மற்றும் சேவற்கொடி தாங்கிக் கொண்டு,கீழிரு கரங்களில் அபய மற்றும் வரத முத்திரைகள் கொண்டு அருள்பாலிக்கின்றார்.

இந்தச் சன்னதியிலிருந்து நாம் நேரே செல்கையில்,வடக்கு திசையில் சிவகாமி அன்னையுடன் நடராஜர் உற்சவர் சிலைகளை நாம் காணலாம்.பிரம்மோற்சவத்தின் சமயத்தில் சுக்கிர பகவானுக்கு கண் பார்வையளிக்கும் நிகழ்விற்கு வீதியுலா கண்டளரும் நடராஜர்,பிரம்மன்,திருமால்,சுக்கிரன்,வாமனர்,மஹாபலிச் சக்கரவர்த்தி ஆகியோரது உற்சவ மூர்த்திகளையும்,வள்ளி,தெய்வானை சமேத முருகப்பெருமான் உற்சவ மூர்த்திகளையும் எழுந்தருளச் செய்துள்ளனர்.வெளியே வருகையில் நின்ற கோலத்தில் பைரவர் காட்சி தருகிறார்.

நாம் வெளியே வருகையில் வெளிப்பிரகாரத்தில் அருள்மிகு சுக்கிரேஸ்வரரை தனிச்சன்னதியில் காணலாம்.சுக்கிரபகவான் குருந்த மரத்தடியில் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை நின்ற நிலையில் வழிபட்டு நிற்கும் காட்சியை நாம் காணலாம்.இந்த நிகழ்வு தல வரலாற்றிற்கு முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது எனலாம்.

இந்த சன்னதிக்கு அருகில்,இரண்யகசிபுவைக் கொன்ற பிறகு நரசிம்மப் பெருமாள் அடைந்த உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு,சிவபெருமான் உருக்கொண்ட சரபேஸ்வரர் தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.எட்டுக் கால்களும்,இரண்டு பெரிய சிறகுகளும்,சிங்க முகமும்,நீண்டு வளர்ந்த மூக்கும் கொண்ட நரியின் வாலும் கொண்ட சரபேஸ்வரர் பட்சி உருவமெடுத்து,எட்டுக் கால்களாலும் அவரைப் பற்றி அலகுகளால் கிழித்து,தோலை உரித்து பின் ஆலிங்கனம் செய்து நரசிம்மப் பெருமாளை அடங்கியதாக அறிகிறோம்.சரபம் என்றால் சிங்கத்தை அடக்கவல்ல எண்காற்ப்பறவை என்பதாகும்.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு கால வேளையில் (மாலை 4.30 மணி முதல் 6.00 வரை) சிறப்பான அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் இச்சன்னதியில் நடக்கின்றன.இச்சன்னதியின் வெளியே வலது புறம் ப்ரத்யங்கிரா தேவியும்,இடது புறம் சூலினி துர்க்கையும் உள்ளனர்.

இவ்வாலயத்தில் விசாலமான கல்மண்டபம் உள்ளது.இதில் தான் விழாக் காலங்களில் எம்பெருமான் மற்றும் உபய உற்சவ விக்ரகங்கள் வீதியுலா காணும் முன் அலங்காரம் செய்யப்படுகிறது.இந்த மண்டபத்தின் வெளியிலுள்ள தூணில் ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளன.

சரபேஸ்வரர் சன்னதிக்கு எதிரே தனிச்சன்னதியில் அருள்மிகு சனீஸ்வரரை கண்டு வணங்கலாம்.இவருக்குப் பக்கத்தில் நவக்கிரஹ சன்னதி அமைந்துள்ளன.

நந்தியம்பெருமாள் சன்னதிக்கு இடதுபுறமுள்ள தூண்களில் பஞ்சமுக கணபதி,முரகர்,பட்டினத்தார்,வள்ளலார்,வீரபத்திரர்,தட்சன்,பிரம்மன்,திருமால் போன்றவர்களின் திருவுருவங்கள் நாம் கண்டு ரசிக்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளன.

அபிராமி அந்தாதி,தேவாரப்பதிகம்,கந்தசஷ்டிக் கவசம்,தல வரலாறு,சண்முக கவசம் போன்றவை ஆலயச் சுற்றுச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.சுந்தரமூர்த்தி நாயனார் இழந்த தனது கண் பார்வையை பெற வேண்டிப் பாடிய பதிகத்தில் உள்ள இரு பாடல்கள் இவ்வாலய சுவற்றில் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாலய பிரார்த்தனைகள்:

சரபேஸ்வரருக்கு ஆறு வாரம் ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையில் பூஜை செய்தால் துஷ்ட சக்திகள் விலகும்.பயம் அகலும்.வாழ்வின் நலன்கள் கிட்டும். சுக்ரேஸ்வரர் சன்னதியில் மனமுருக வேண்டிக் கொண்டு அங்குள்ள கல்வெட்டில் உள்ள பதிகங்களை 16 முறை பாடினால் கண் பார்வை குறைபாடுகள் நீங்குவதாக பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

நினைத்த காரியம் நிறைவேறவும்,மனக்குறைகள் நீங்கவும்,திருமணம் நடக்கவும் காமாட்சியம்மனை வேண்டி பலனடைகின்றனர். செல்வம் பெருக்கவும்,திருமணத்தடை நீங்கவும் வள்ளி,தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமியை வழிபடுகின்றனர்.

எதிரிகளின் தொல்லை,பயம் அகல,காரிய சித்தி பெற தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்குகின்றனர்.

ஏழரைச்சனி பிடியிலிருந்து நிவாரணம் பெற ஒவ்வொரு சனிக்கிழமையும் நெய் அல்லது எள் எண்ணெய் விளக்கேற்றி சனீஸ்வரரை வழிபடுகின்றனர். காரியத்தடை நீங்க,வேலை வாய்ப்புப் பெற,வெளிநாட்டில் வேலை கிடைக்க ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுகின்றனர்.

குடும்பத்தகராறு நீங்கவும்,வழக்கில் வெற்றி பெறவும்,இழந்த செல்வத்தை மீட்டவும் வராகி அம்மனை தொழுகின்றனர்.

இவ்வாலய திருவிழாக்கள் ;

லட்ஷதிபம்,வைகாசி பெருவிழா,வசந்த உற்சவம்,ஆடி பூரம்,விநாயகர் சதுர்த்தி,பவித்ரோ உற்சவம்,நவராத்திரி விழா,மஹா கந்தசஷ்டி,கார்த்திகை தீபம்,திருவெண்பாவை மாணிக்கவாசகர் உற்சவம்,பொண்ணுன்சல் உற்சவம்,அரூட்ரா தர்சனம்,தை புனர்பூசம் நட்சத்திரம்,கும்பாவிஷேக தினம்,சங்கராந்தி உற்சவம்,கணு உற்சவம்,மாசி கடலாட்டி விழா,பங்குனி லட்ஷ தீபம் போன்ற உற்சவங்கள் வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது.



ஆலயத்தை நிர்வகித்த அறங்காவலர்கள்:

மயிலை செங்குந்தர் மரபினர்கள் தங்களது சொந்த முயற்சியியாலும் உழைப்பாலும் இக்கோயில் கட்டப்பட்டு இன்றுவரை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு முந்நூறு ஆண்டுகள் என அறியப்பட்டாலும் 1874 முதற்கொண்டு ஆலயத்தை நிர்வகித்த அரங்ககாவலர்களின் பட்டியல் மட்டுமே கிடைக்கப்பட்டுள்ளது.


1874 - திரு.செங்கல்வராய முதலியார்

1874 - 1876 - திரு.க.குமாரசாமி முதலியார், திரு.வெ.குமாரசாமி முதலியார்

1876-1882 - திரு.பவழ.சரவணமுதலியார், திரு.இரத்தின முதலியார்.

1882-1883 - திரு.வைதி.எல்லப்ப முதலியார்.

1883-1888 - திரு.சாந்தா.குமாரசாமிமுதலியார், திரு.மல்லன் அப்பாவு முதலியார்

1888-1900 - திரு.ஒத்தாண்டி துளசிங்க முதலியார், பெருங்களத்தூர் திரு.முருகேச முதலியார், திரு.வைதி முனியப்ப முதலியார்

1888-1916 -திரு.முத்து குழந்தைவேலு முதலியார்

1900-1908 - திரு.மூட்டா.ஆண்டியப்ப முதலியார், திரு.பு.ஆ.கந்தசாமி முதலியார்

1908-1911 -திரு.ஏ.குழந்தைவேலு முதலியார், திரு.குருசாமி முதலியார்

1910-922 -திரு.க.மாசிலாமணி முதலியார்

1916-1921 -திரு.கா.வேலு முதலியார்

1923-1927 -திரு.கா.தனகாளத்தி முதலியார்

1927-1931 -திரு.ஏ.வேலு முதலியார்

1933-1935 -திரு.ந.அண்ணாமலை முதலியார், திரு.சி.சுப்புராய முதலியார், திரு.அ.தட்க்ஷிணாமூர்த்தி முதலியார்

1935-1948 -திரு.பு.க.சம்பந்த முதலியார்

1935-1936 -திரு.ஏ.பாலசுந்தர முதலியார்

1937-1948 -திரு.சு.குழந்தைவேலு முதலியார், திரு.அ.தட்க்ஷிணாமூர்த்தி முதலியார்

1948-1962 -திரு.அமராவதி வெங்கடாஜல முதலியார்(Managing trustee)

1955-1965 -திரு.பொன்னாண்டை சி.பாலசுப்பிரமணி முதலியார்

1959-1964 -திரு.ஏகப்ப அ.இராமசாமி முதலியார்

1962-1965 -திரு.செ.பாலசுப்பிரமணி முதலியார்

1964-1966 -திரு.த.சுப்பிரமணி முதலியார்

1965-1971 -திரு.அமராவதி ஜெ.ராமநாத முதலியார்

1965-1966 -திரு.முருக்கஞ்சேரி வி.சிவமணி முதலியார்

1966-1971 -திரு.பொன்னாண்டை கு.கந்தசாமி முதலியார், திரு.காரைக்கால் லோ.வேதாசல முதலியார்

1971-1974 -திரு.காரைக்கால் சாம்பசிவ முதலியார், திரு.ச.இரத்தினவேலு முதலியார்

1971-1982 -திரு.பொன்னாண்டை க.சாமிநாத முதலியார்

1974-1976 -திரு.த.சுப்பிரமணி முதலியார்

1974-1995 -திரு.த.நடராஜ முதலியார்

1976-1982 -திரு.A.V.இராமநாத முதலியார்

1982-1995 -திரு.P.S.சாம்பசிவ முதலியார்(Managing trustee)

1995-2000 -திரு.M.R. குமாரதேவ செங்குந்தர் (அறங்காவலர் குழுத்தலைவர்)

1995-2015 -திரு.R. கோபிநாத் செங்குந்தர், திரு.S.P. தாமோதரன் செங்குந்தர்

2000-2015 -திரு.R.சண்முகம் செங்குந்தர்

20115-2018 -திரு.P.V.மனோகரன் செங்குந்தர் (அறங்காவலர் குழுத்தலைவர்), திரு.A.கணேசன் செங்குந்தர், திரு.S.ஆறுமுகம் செங்குந்தர்

2018 -திரு.டி.கே.சங்கர் செங்குந்தர், திரு.எஸ்.ரகுநாதன் செங்குந்தர், திரு.எஸ்.இளங்கோ செங்குந்தர்

பெற்ற தாய் தனை மக மறந்தாலும் , பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் , உயிரை மேவிய உடல் மறந்தாலும் , கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும், கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும், நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும், நமச்சிவாயத்தை நான் மறவேனே